கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்டுகொள்ளாத காவல்துறை& வருவாய் துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காட்பாடி அடுத்துள்ளது பிரம்மபுரம்.இந்த பிரம்மபுரம் கிராமத்தில் பாலாறு ஒட்டி செல்கிறது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காட்பாடி ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் என்பவர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தனக்கு சொந்தமான டிராக்டரில் பாலாற்று மணலை அள்ளிச் சென்று ரூ. 18 ஆயிரம் வீதம் இந்த மணலை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு மணல் கடத்த துணையாக இருப்பது ஸ்கூட்டரில் செல்லும் ஒரு இளைஞர் என்றே சொல்லலாம்.
அவர் ராஜேஷூக்கு பைலட் போன்று வழிகாட்டிக் கொண்டும், யாராவது வருகிறார்களா என்று வேவு பார்த்துக் கொண்டும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஸ்கூட்டரில் செல்பவர் முன்னே செல்ல மணல் டிராக்டர் பின்னே செல்கிறது. அதாவது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல இந்த மணல் கடத்தல் சத்தம் இன்றி இரவோடு இரவாக நடத்தப்படுகிறது.
இந்த டிராக்டரில் மணல் அள்ளும் பணி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது.
அதற்குள்ளாக ஐந்து நடைகள் இந்த டிராக்டர் மூலம் மணல் விற்பனையை செய்து கல்லா கட்டி விடுகின்றனர் திமுகவினர்.
இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரம்மபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் மணல் கடத்தல்காரர்களிடம்,
அதாவது மணல் மாஃபியாக்களிடம் நெருக்கமாக கூட்டணி வைத்துக் கொண்டு அவர்களிடம் மாமூலை கறந்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று வருவாய்த் துறையினரும் தங்களுக்கு வேண்டிய மாமூலை பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் பிரம்மபுரத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனக்கு ஒரு மாமூலை மட்டும் பெற்றுக் கொண்டு அமைதியாக இருக்கிறார் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மணல் கடத்தும் நிகழ்வு பிரம்மபுரம் ஆற்றங்கரை வீதியில் நடைபெறுவது உறுதிபட தெரியவந்துள்ளது.
இதை யாரோ ஒரு சமூக ஆர்வலர் இரவு நேரத்தில் மறைந்து மறைந்து அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் கசிய விட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது எங்கெங்கெல்லாம் இணையதளம் செயல்படுகிறதோ அங்கெல்லாம் சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லை கண்டும் காணாமல் விடப்படுமா? என்பது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனுக்கு வெளிச்சம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரம்மபுரம் வாழ் பொதுமக்கள்.
இப்படி ஆற்று மணலை கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் திமுகவினர் இரவு நேரங்களில் திருடி விற்பனை செய்து கொழுத்த லாபம் பார்ப்பதை தடுக்க வேண்டிய அரசு இயந்திரங்கள் தூங்கி வழிவது ஏனோ என்று தெரியவில்லை. இதில் வேறு ஏதாவது உள்குத்து உள்ளதா? என்பதும்,
இதனால் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பதும் சரியாக புலப்படவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும்.
இந்த மணல் திருட்டை யார் தடுக்கிறார்களோ அவர்கள் உயிருக்கே ஆபத்து என்றும் அரை கூவல் விடுத்துள்ளனர் மணல் மாஃபியாக்கள்.
ஆதலால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இரும்பு கரம் கொண்டு பிரம்மபுரத்தில் நடைபெறும் மணல் திருட்டுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் வருவாய்த்துறை கண்டு கொள்ளவே கண்டு கொள்ளாது என்பது உறுதிபட தெரிந்து விட்டது. காவல்துறையாவது தனது கடமையை கண்ணியத்துடன் செய்ய முன்வர வேண்டும் என்று பொதுமக்களும்,
சமூக ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த மணல் திருட்டுக்கு மயில்வாகனன் காப்பு கட்டுவார் என்பதையும் நாம் போக போக தெரிந்து கொள்ளலாம்.