களக்காடு நகரட்சிக்கு தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் (மார்ச்.22) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, களக்காடு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கக் கோரியும், உப்பாறு ஆற்றுக்கரையோர பொதுபாதையை வழிமறித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் மாவட்ட ஆட்சித் தலைவரை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
களக்காடு ஸ்டேட் பாங்க் எதிரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர செயலாளர் காஜா முகைதீன், துணை தலைவர் கபீர், இணை செயலாளர் முகம்மது ரபிக், மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா , வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் உசேன், செயற்குழு உறுப்பினர்கள் ஆரிப் பைஜி, ராம்நாடு பீர்முகம்மது, ஷேக் முகம்மது ஜமீன், ஆதம், முகம்மது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை, சிங்கம் பத்து, வியாசராஜபுரம், கோவில்பத்து உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். பெண்கள் காலிக்குடங்களுடன் நிகழ்வில் கலந்துகொண்டனர். சுமார் 250க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.