BREAKING NEWS

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஆட்சியரையும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊரில் உள்ள காலனி பகுதியில் சிலர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டி வைத்திருப்பதாக அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன் காரணமாக, உயர்நீதிமன்றம் இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கும் மாநில எஸ்சிஎஸ்டி ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தது.

 

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவர் சமீபத்தில் ரிஷிவந்தியம் கிராமத்தில்
ஆக்கிரமிப்பில் கட்டியிருந்த வீடுகளை நீதிமன்றம் உத்தரவு படி அகற்றியுள்ளார்.

 

இதில் ஆக்கிரமிப்பில் சிறிதளவே இருந்த வீட்டினை முறையாக வெட்டி எடுக்காமல் ஜெ சி பி இயந்திரம் கொண்டு அந்த பாகத்தை எடுக்கும் போது வீடு பாதிப்புக்கு உள்ளாகியது என்றும் அன்று இரவு மழை பெய்ததால் வீடு சாய்ந்து விட்டதாக பாதிக்கப்பட்ட நபர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையில் ஆக்கிரமிப்பை எடுக்க கூடாது என்று மறைமுகமாக எதிர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த எதிர்ப்பையும் மீறி ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் ஆக்கிரமிப்பை அகற்றினார் என்று கூறப்படும் நிலையில் தனி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் கோரிக்கை வைத்தார் என்றும் கூறப்படுகின்றது.

 

இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதனால் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனுக்கு ஆதரவாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் கள்ளக்குறிச்சி சார்பாக களமிறங்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த கோரி போராட்டம் நடத்தினர்.

இதுவரையில் தனி வட்டாட்சியர் மீதான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்யவில்லை என்பதால் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டம் அறிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

 

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் தலைமையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சுமார் 300 பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த ஆயத்தமாக இருந்த நிலையில் போலீசார் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அவர்களை அனுமதிக்க விடாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர்.. போராட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது இரண்டு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு வழியாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், போலீசாரின் தடுப்புகளை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்து ஆட்சியரின் அலுவலகம் முனபே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இரவு 8 மணியளவில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் வந்து காத்திருப்பு போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல கேட்டுக்கொண்டார்.போராட்டக்காரர்கள் சம்மதிக்காதால் காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு வருவாய் துறை சங்கத்தினர் அனைவரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் வைத்தனர். இதனால் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

CATEGORIES
TAGS