காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை,அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு.

காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு, காரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் இது குறித்து மேலும் கூறியது.
காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியனவற்றை சரி செய்திடும் வகையில் பேருந்து நிலையத்தை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு புதிய பேருந்து நிலையத்தை விரைவில் அமைக்க இருக்கிறோம்.காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காரைப்பேட்டை மற்றும் சித்தேரி மேடு ஆகிய இரு இடங்கள் உத்தேசமாக புதிய பேருந்து நிலையத்தை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் சந்தித்து ஆலோசித்து துறை ரீதியாகவும் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில் விரைவில் காஞ்சிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி,எம்எல்ஏ க்கள் க.சுந்தர்,சிவிஎம்பி. எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் க.சிவருத்ரய்யா, கோட்டாட்சியர் கனிமொழி, காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஆணையாளர் ஜி.கண்ணன், காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேசுவரன், ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.
