காட்பாடி வள்ளிமலை ரோட்டில் பல மாதங்களுக்கும் மேலாக குப்பைகளை அப்புறப்படுத்தாத அவலம்!

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்திற்கு உட்பட்டது வள்ளிமலை சாலை. இந்த வள்ளிமலை சாலையில் பாரதி ஐடிஐ அருகில் உள்ள கல்லறையின் சுற்றுச்சூழல் அருகில் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி விட்டு பல விஷமிகள் செல்கின்றனர்.
இதனை தடுப்பதற்கு யாரும் முன் வரவில்லை. இதனால் காற்றில் குப்பைகள் பறந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த சாலை 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஆகும்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கால்நடைகள் அதிகம் சுற்றி திரியும் பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் வீசப்படுவதால் கால்நடைகள் அவற்றை தின்றுவிட்டு பரிதாபமாக அடிக்கடி உயிரிழந்து வருகின்றன.
இது ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது பரிதாபத்துக்குரியதாகும். இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டிய வேலூர் மாநகராட்சி நிர்வாகம் காட்பாடி 1வது மண்டலத்தைச் சேர்ந்த சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் மற்றும் துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட யாரும் இதில் தனிக் கவனம் செலுத்துவது கிடையாது.
இந்த குப்பையை அள்ளாமல் பல மாதங்களாக மேலே மேலே குப்பைகளை கொட்டி வருகின்றனர் .இதனால் குப்பை மலை போல் குவிந்து காணப்படுகிறது. திடீரென இந்த வழியாக மாவட்ட ஆட்சியர் செல்லும் நிகழ்வு ஒன்று கடந்த வாரம் நடைபெற உள்ளது என்பதை அறிந்து உஷாரான மாநகராட்சியினர் அந்த பகுதியில் துணிகளை போட்டு மூடி வெளியில் தெரியாமல் மறைத்தனர்.
இதற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் வந்து சென்ற பிறகு அதே நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து மெத்தன போக்கில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர்கள் எங்கு சென்றார்கள்? ஏன் இதனை அப்புறப்படுத்தவில்லை? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. தொடர்ந்து வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காட்பாடி 1வது மண்டல அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்தும் இந்த குப்பையை அப்புறப்படுத்தவே இல்லை.
இந்த ஏமாற்ற நிலைமை பொதுமக்களுக்கு நிரந்தரமாக வந்துவிட்டது. இந்த இடத்தில் குப்பைதான் கொட்டுகின்றனர் என்பதை உறுதிபட தெரிந்த மாநகராட்சி நிர்வாகமாவது முந்திக்கொண்டு அந்த இடத்தில் குப்பைத்தொட்டி ஏதாவது நிறுவலாம்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் மாநகராட்சி நிர்வாகம் இப்படி குப்பையை காற்றில் பறக்க விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறது. இப்படி தெனாவெட்டாக நடந்து கொள்ள இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று தெரியவில்லை.
பொதுமக்களுக்காக இவர்களா? இல்லை இவர்களுக்காக பொதுமக்களா? என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. ஒரு நாள் கூட 1வது மண்டலத்துக்கு நியமிக்கப்பட்ட சுகாதார அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் இந்த பகுதிகளுக்கு, குறிப்பாக வள்ளிமலை சாலை வேலூர் மாநகராட்சியின் 2வது வார்டு பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பகுதிகளில் வந்து பார்வையிட்டதே கிடையாது.
பள்ளிக்குப்பம் வார்டில் முழுமையாக கொசு மருந்து தெளிப்பது கிடையாது. குப்பைகளை முழுமையாக அகற்றுவது கிடையாது. தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
இவ்வாறு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக போய்க் கொண்டுள்ளது. இதை தொடர்ந்து அமைச்சர் நேருவுக்கு புகார் மனு அனுப்பவும் மாநகராட்சி முறை மாமன்ற நடுவத்திற்கு புகார் அனுப்பவும் பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
அதற்குள்ளாவது இந்த பகுதி சுத்தப்படுத்தப்படுமா? அல்லது தொற்று நோய்களின் பிறப்பிடமாகவே கை கழுவி விடப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
