குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி.துணை தலைவர் இரா.முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் 47 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி.யின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் படி குத்தாலம் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகளில் சமுதாய கூடங்கள் கட்ட ரூ 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் பணிமுடிந்தவுடன் ரூ.10 லட்சம் மட்டுமே குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் பணம் வழங்கியது.29 லட்சம் இதுவரை வழங்கவில்லை.
இந்நிலையில் மாநில பொது தணிக்கையாளரின் கடிதப்படி அந்த நிலுவைத் தொகையை ஒன்றிய பொது நிதியில் இருந்து வழங்க கோரிய தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
தீர்மானங்களை உதவியாளர் திருநாவுக்கரசு வாசித்தார்.கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:
ரமேஷ்(திமுக):தத்தக்குடி வேலக்குடியில் சாலை அமைக்க வேண்டும். தத்தக்குடியில் பள்ளி அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டி உடையும் நிலையில் உள்ளது.உடனடியாக சரி செய்ய வேண்டும்.
வினோத்(பாஜக):செம்பியன் கோமல் உக்கடைத்தெருவில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். செம்பியன் கோமல் பிரதான சாலை உக்கடை-நச்சினார்குடி சாலைகளை சீரமைக்க வேண்டும். சின்னகோமலில் தனியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாத நிதியை ஒன்றிய பொறுப்பில் எடுத்து பயன் படுத்த வேண்டும் என்றார்.
சிவகுமார் (பாமக):
இக்கூட்டத்திற்கு 13 துறை அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தும் நீர்வளத்துறை தவிர மற்றவர்கள் கலந்து கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.கோனேரிராஜபுரம் கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டவேண்டும்.புதிய கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.தென்கோரையாறில் தூர்வாரவேண்டும் என்றார்.
செழியன்(அதிமுக):பாலையூர் வடக்கு தெருவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.ஆகவே உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.பரமசிவபுரம் வாய்க்காலில் நீர் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.
பாஸ்கரன்(அதிமுக):கீழ பெரம்பூரில் காருகுடி வாய்க்கால் ஆக்கிரமித்து மூடப்பட்டுள்ளது.விவசாய பாசன வசதிக்காக அதை வெட்டி சரி செய்ய வேண்டும்.சேத்தூர் பள்ளி கட்டிடம் முழுமையாக இடிந்து விட்டது.
சத்யா(அதிமுக):கப்பூர் ஊராட்சி பாரதிதாசன் நகர்.சிவன் கோவில் தெரு.கந்தமங்கலம் கீழ்த் தெரு ஆகியவற்றில் தார் சாலை அமைக்க வேண்டும்.
ராமதாஸ்(திமுக):ஆலங்குடி ஊராட்சி முத்துக்குமரன் நகர்.திருமணஞ்சேரியில் சாலைகள் அமைக்க வேண்டும்.
ராஜவள்ளி(திமுக):திருவாலங்காடு மாம்புள்ளி ரேசன்அங்காடி அமைக்க வேண்டும்.
வசந்தகோகிலம் (திமுக):அரிவளூர் ஊராட்சியில் தேவையான சாலைகள் அமைக்க வேண்டும்.
புவனேஸ்வரி (திமுக):கடக்கும் மேட்டுத்தெருவில் சாலை அமைக்க வேண்டும்.
ராஜா (திமுக):
சேத்திரபாலபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
அரையபுரம் காவிரி ஆற்றில் படித்துறை அமைக்க வேண்டும்.
அரையபுரம்,தொழுதாலங்குடி கிராமங்களில் பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை சரிசெய்ய வேண்டும் என்றார்.
தலைவர்:அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் பாரபட்சமின்றி ஏற்கப்பட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.பணிதள பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.