கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம்,
கும்பகோணம் மாநகருக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு, கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள நவீன காவல் கட்டுப்பாடு மைய நுழைவு வாயிலில், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, கும்பகோணம் சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கான புதிய அலுவலக கட்டிடத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார்.
பின்னர் கும்பகோணம் மற்றும் மதுரையில் சிறப்பாக பணியாற்றிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு வெகுமதியுடன், நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில், சிலை தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன், திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில்,
கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர். குறிப்பாக, 1962ம் ஆண்டு களவு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டது சிறப்பிற்குரியது.
இந்த சிலைக்கு விலை மதிப்பிட முடியாது எனவும் பெருமை தெரிவித்ததுடன், மீட்கப்பட்ட இந்த சிலைகள் அனைத்தும் இனி எந்த காலத்திலும் யாராலும் திருட முடியாத வகையில், சென்னை ஐஐடி உதவியுடன், சமீபத்தில் கைப்பற்றி 300 சிலைகள் உட்பட அனைத்து சிலைகளும், முப்பரிமான முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரேடியோ ப்ரீக்குவன்ஸி முறையில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும்,
அப்படி மீறி இச்சிலை திருடப்பட்டால், இது எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் இந்த நவீன தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் களவு போய் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சுவாமி சிலைகளில் கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, மேலும் 60 சிலைகள் விரைவில் மீட்கப்படவுள்ளது.
சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கு திறமையும், ஆர்வமும், துணிந்து நடவடிக்கை எடுக்கும் அலுவலர்கள் இருந்தாலே சிறப்பாக செயல்பட முடியும், எண்ணிக்கை பெரியதல்ல என்றும், வெளிநாடுகளில் இருந்து 60 சிலைகளையும் விரையில் மீட்க சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும்,
இந்த குழு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நமது புராதன சிலைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கஞ்சா வேட்டை ஒன்று,
கஞ்சா வேட்டை இரண்டு என இருவேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதன் வாயிலாக, இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் குற்றவாளிகளின் வங்கி கணக்குகள், அவர்களது சொத்துக்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால்,
எதிர்காலத்தில் அவர்களால் இத்தகைய குற்றங்களில் ஈடுபட முடியாத சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இத்தகைய குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்றார்.
தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களை குறைக்கவும், முற்றிலுமாக தடுக்கும் வகையிலும், மாவட்டம் தோறும், தனியாக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இணையதளங்கள், சமூக வலைதளங்கள் குறித்தும், ஆழ்ந்த திறனும், கணினியை இயக்கும் திறம்படைத்த நபர்கள் உதவியுடன் ஒரு டிஎஸ்பி தலைமையில் மாவட்டம் தோறும் நான்கு பேர் கொண்ட தனி அணி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர்,
சைபர் க்ரைம் குற்றங்களை குற்றம் நடந்த நிமிடமே காவல் உதவி செயலியை பயன்படுத்தி தகவல் அளித்தால், அவர்கள் இழந்த பணத்தை உடனடியாக மீட்க உதவியாக இருக்கும் என்றும், சமீபத்தில் இப்படி பல லட்சம் ரூபாய் மோசடி பணம் மீட்கப்பட்டது என்றும்,
இந்த செயலி துணை இருந்தால் பெண்கள் எந்த நேரத்திலும் தனியாக எங்கு சென்றாலும், பாதுகாப்புடன் பயணிக்க முடியும். எனவே இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திட வேண்டும் என்றும்,
சைபர் கிரைம் குறித்து மக்களிடையே விழிப்பணர்வு ஏற்படுத்திட பல்வேறு வீடியோ காட்சி பதிவுகளை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது என்றும்,
தமிழக அரசின் உத்தரவுபடி, காவல்துறை உத்தரவுபடி, காவலர்களுக்கு வார விடுமுறை தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.