குற்ற செயல்களை தடுக்க தஞ்சை மாநகர் முழுவதும் 5 கோடி ரூபாய் மதிப்பில் 1400 சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது என தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சை சமுத்திரம் ஏரி ஒட்டி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. பாதாள சாக்கடை கழிவு நீர் இங்கு சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான நீர் வடவாற்றில் விட்டு விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுத்திகரிப்பு எந்திரங்கள் செயல்படாமல் இருந்தது. தற்போது எந்திரங்கள் பழுது நீக்கப்பட்டு இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதனை அடுத்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேயர் சண். ராமநாதன் கழிவு நீர் சுததிகரிப்பு நிலையத்தில் எந்திரங்கள் பழுது நீக்கம் செய்து இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது என்றார்.

மேலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோலார் முறையில் 3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை மின்வாரியம் விலைக்கு பெற்று கொள்கிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு மாதம் மின் கட்டண செலவு 12 லட்சம் ரூபாய் சேமிப்பு ஆகிறது என்றார். தொடர்ந்து பேட்டி அளித்த மேயர், குற்ற செயல்களை தடுக்க மாநகர் முழுவதும் 5 கோடி ரூபாய் மதிப்பில் 1400 சிசிடிவி பொருத்தப்பட உள்ளதாக மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார்.
