குழந்தைகள் தினவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே குழந்தைகள் தினவிழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஓவியப்போட்டி, வண்ணம் தீட்டுதல், தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்து மற்றும் கட்டுரைப் போட்டி என மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று தூத்துக்குடி பெல் ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீவைகுண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் துரைராஜ் ஆசீர்வாதம் தலைமை தாங்கினார். தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பிரபுகுமார் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஜோசப் வரவேற்றார்.
குழந்தைகள் தினவிழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் ஓட்டுமொத்த சாம்பியனுக்குறிய முதல் பரிசை சாயர்புரம் செயின்ட் மேரீஸ் பள்ளியும், இரண்டாம் பரிசை ஜாய் ஷரோன் பள்ளியும், மூன்றாவது பரிசை செபத்தையாபுரம் அருள்மிகு முத்து மாலையம்மன் பள்ளியும் தட்டிச்சென்றன.

விழாவில், தமிழ்நாடு மழலையர் துவக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சங்கச் செயலாளர் சுந்தர்ராஜ், இணைச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட மழலையர் துவக்கப்பள்ளிகள் சங்கத் தலைவர் வல்லநாடு பாரதி சங்கரலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் ஜாய் பெல் பிராங்க் நன்றி கூறினார்.
