கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். கேரள லாரியை பறிமுதல் செய்தது காவல்துறை. மூவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், மக்காத குப்பைகள் போன்ற பல்வேறு கழிவுகளை அவ்வப்போது விவசாய நிலங்களிலும் நீர் நிலைகளிலும் கொட்டி வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.
மேலும் கடந்த நவம்பர் 7ஆம் தேதி சங்கரன்கோவில் அருகே நாரணாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டி சென்றனர். இதனால் தூர்நாற்றம், சுகாதார கேடு மற்றும் அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்கள் உண்டாகியதாக கூறப்படுகிறது. இது குறித்து நிலத்தின் உரிமையாளர் திருவேங்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவுபடி சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நாரணாபுரம் வந்த லாரிகளை ஆய்வு செய்த தனிப்பிரிவினர், இன்று சங்கரன்கோவில் அருகே கேரளாவை சேர்ந்த லாரி ஒன்றை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் அசீம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் இங்கிருந்து கேரளாவுக்கு மாடுகளை விற்பனைக்கு லாரியில் ஏற்றிச் சென்று திரும்பி காலியாக தமிழ்நாட்டிற்கு வரும் போது கேரளாவின் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகளை ஏற்றி வந்து இங்கே கொட்டிவிட்டு செல்வதும், இதற்கு கால்நடை விற்பனை தரகருக்கு கமிஷனாக 3000 முதல் 5000 ரூபாய் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவேங்கடம் காவல்துறையினர் சங்கரன்கோவில் அருகே ஆட்கொண்டார்குளத்தை சேர்ந்த கால்நடை தரகர் வெள்ளத்துரை என்ற முருகன் மற்றும் மாரியப்பன் கேரளாவை சேர்ந்த லாரி ஓட்டுநரும், உரிமையாளருமான அசீம் ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.