கோவில்பட்டி அருகே கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கொன்ற பாசக்கார தந்தை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி புது காலனியை சேர்ந்தவர் 25 வயதான தர்மதுரை. கஞ்சா போதைக்கு அடிமையான இவர், அப்பகுதியில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தர்மதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த இவர் சில மாதங்களாக வெளியூரில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊரான லிங்கம்பட்டி திரும்பிய தர்ம துரை, கடந்த 21 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேகம் மரணம் என நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் தர்மதுரை மூச்சுத் திணறி உயிரிழந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து போலீசார் வேறு கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தர்மத்துரையின் தந்தை மருது பாண்டி மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்படவே அவரை தனிப்படை போலீசார் அழைத்து சென்று துருவித் துருவி விசாரித்தனர்.
இதில் போதைக்கு அடிமையான மகனை தந்தையே தலையணையை அமுக்கி கொலை செய்திருப்பது அம்பலமானது.
108க்கு போன் செய்து மகன் போதையில் மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் வாகனம் வீட்டுக்கு வந்ததும், அதிலிருந்த ஊழியர்கள் வந்து தர்மதுரையை பரிசோதித்த போது அவர் உயிரிழந்து விட்டதை உறுதி செய்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றி மகனை தலையணையால் அமுக்கி கொலை செய்த தந்தை மருதுபாண்டியை போலீசார் கைது செய்தனர்.