கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து- குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும் என ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகர மாகும். கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மூப்பன்பட்டி. இலுப்பையூரணி, பூசாரிபட்டி. வடக்கு, தெற்கு திட்டக்குளம் மற்றும் மேற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, தோணுகால், சாலைப்புதூர், ஆவல்நத்தம், அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளியங்குளம் பாறைப்பட்டி, கிருஷ்ணா நகர்,சுபாநகர், கணேஷ் நகர், ராஜகோபால் நகர், பல்லக்கு ரோடு,
சண்முக சிகாமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கோவில்பட்டியை சுற்றி சுமார் 30 கிராமங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பொது மக்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள் கோவில்பட்டி நகருக்குள் வந்து செல்கின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது.
கோவில்பட்டி நகரில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், போக்குவரத்து பிரிவு மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு என பல காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொது மக்களின் நலன் காத்திடவும், விபத்து மற்றும் குற்றச் செயல்களை தடுத்திடவும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
பெருகி வரும் வாகன போக்குவரத்தை கணக்கில் கொண்டு போக்குவரத்து -காவல் ஆய்வாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். அதேபோல் சமீப காலங்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன்கருதி கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின் புதூர், கழுகுமலை, கயத்தார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்றப்பிரிவுக்கென தனி ஆய்வாளர் மற்றும்
கோவில்பட்டி மக்கள் தொகை எண்ணிக்கை கணக்கில் கொண்டு அதிக காவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் போலீசார் இரவு நேரங்களில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.