கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா.
கோயம்புத்தூர் காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2023 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் மேலாண் இயக்குனர் லஷ்மிநாராயணசாமி,மற்றும் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் சுகுணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் முதல்வர் கோவிந்தராஜுலு , டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக, பிரபல சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா கலந்து கொண்டு கல்லூரி மாணவ,மாணவிகளிடையே நகைச்சுவையாக உரையாடினார். அப்போது பேசிய அவர், தாம் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் ஒரு பரிசை கூட பெற்றதில்லை என கூறிய அவர், ஆனால் தற்போது தாம் பரிசு வழங்கும் இடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். இதே போல மாணவ, மாணவிகள் ஏதாவது ஒரு துறையில் எப்போது வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது மாணவன் நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என எண்ணும் ஆசிரியர்களை மாணவர்கள் எப்போதும் நினைவு கூறி போற்ற வேண்டும் எனவும் அவர் பேசினார்..விழாவில் கௌரவ அழைப்பாளர்களாக பிரபல யோகா சாதனையாளர் வைஷ்ணவி,பிரபல பாடகர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் மாநில, மாவட்ட, மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டு, அறிவு திறன் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், அண்மையில் மாநில அளவில் தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் முதல் இடம் பிடித்த சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கியும் கவுரவித்தனர்.
விழாவில் மாணவ , மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.