சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

சங்ககிரியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனாரப்பன் கோவில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுமார், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கோனேரிப்பட்டி அக்ரஹாரம், பொன்னம்பாளையம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான ஐயனாரப்பன் கோவில் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக பழைய கோவிலிலேயே அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்த நிலையில், ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கோவிலை சீரமைத்து, தற்போது கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று ஐயனாரப்பன் கோவிலில் இருந்து, கோனேரிப்பட்டி காவிரியாற்றிற்கு சென்று, புனித நீராடி, ஐயனாரப்பனுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு முழுவதும் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை 10 மணியளவில், கோபுர கலசங்களுக்கும், ஐய்யனாரப்பன், வீரகாரர், விநாயகர், முருகன், கன்னிமார், மாகலட்சுமி, சிவன்-பார்வதி ஆகிய சிலைகளுக்கு வேதங்கள் முழங்க, மூல கலசத்திற்கு பூஜைகள் செய்து, பக்தர்கள் எடுத்து வந்த புனித நீரை தெளித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோயிலானது, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விழாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கோவிலுக்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். கூட்ட நெரிசலில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க, தேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.