சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் சரியாக மாலை 4.15 க்குத் தொடங்கியது. ஊர்வலத்தை வழி நடத்திய ஆர் எஸ் எஸ் தொண்டருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டனர். இதையடுத்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், மூத்த உறுப்பினர்களும் மலர் தூவ ராகவானந்தாசாமி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து ஊர்வலம் பிரதான சாலை ராஜபாளையம் சாலை திருவள்ளுவர் நகர் திருவள்ளுவர் சாலை திருவேங்கடம் சாலை மாதாங் கோவில் தெரு மற்றும் கீழ ரதவீதி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வடக்குரத வீதி மேடையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் தென்காசி மாவட்டம் முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தையொட்டி நகரின் நுழைவு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. குறிப்பாக ஆர் எஸ் எஸ் ஊர்வலம் தொடங்கும் வடக்குரத வீதி முழுவதும் தென்காசி மாவட்ட காவல்துறை வெடிகுண்டு பிரிவினர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.