சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாரணாபுரம் ஊருக்கு கிழக்கே பெருமாள்சாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்) என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது.
கடந்த 7-ஆம் தேதி அந்த நிலத்தில் கேரளாவிலிருந்து லாரியில் கழிவுகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்று பெருமாள்சாமி பார்த்தபோது அழுகிய நிலையில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதில் மருத்துவ கழிவுகள், பஞ்சு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள் இருந்தது.இது குறித்து அவர் வருவாய்த் துறையிடமும், காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் பேரில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அதனை உடனே தீயிட்டு எரித்து விடுவோம் என கூறி தீயிட்டு அழித்தனர் அந்த கழிவு பொருட்களை கூட இன்னும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் கேரளாவில் இருந்து லாரியில் கழிவுகள் கொண்டுவரப்பட்டு அதே இடத்தில் மூட்டை மூட்டையாக மீண்டும் கொட்டப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து அப்பகுதியில் கேரளாவில் இருந்து கழிவுகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அருகில் விவசாய நிலங்கள் இருப்பதால். நிலத்தின் தன்மையும் மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் கிராம மக்கள் பயன்பாட்டில் உள்ள ஊருணியில் கழிவுகள் கலந்து மாசுபடும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
எனவே வருவாய் மற்றும் காவல் துறையினர் அப்பகுதியில் கழிவுகளை கொட்டியவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்றால் சாலை மறியல் செய்வோம் எனவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.