சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலரை காந்திநகர் பொதுமக்கள் முற்றுகை.

சின்னசேலம் காந்தி நகரில் தரமற்ற முறையில் பள்ளி கட்டிடம் கட்டப்படுவதாக பகுதி மக்கள் அரசுத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எவரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளாததால் திடீரென அந்த பகுதியில் உள்ளவர்கள் பள்ளி கட்டிட கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியதால் அதிகாரிகள் வந்து தரமாக கட்டித் தருகிறோம் என உறுதி அளித்துச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காந்தி நகரில் ரூபாய் 25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாறு மாதங்களாக இந்த பள்ளி கட்டிடம் கட்டும்ப பணி நடைபெற்று வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் கட்டும் பணியை அந்த பகுதியில் உள்ள தமிழ்நாடு சுபிக்ஷம் கட்டுமான நல சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் பகுதி பொது மக்கள் கண்காணித்து வந்த நிலையில், பள்ளி தரமற்ற முறையில் கட்டப்படுவதாக தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு புகார் மனு அளித்திருந்தனர். இருப்பினும் இதுநாள் வரையில் எவரும் வந்து நேரில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் திடீரென பள்ளி கட்டிடம் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பணியை தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து இச்சம்பவத்தை அறிந்த சின்ன சேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் அசோக், மற்றும் பள்ளி கட்டிடம் கட்டும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ளவர்கள் பள்ளி கட்டிடம் கட்டும் பணியில் பேஸ் மட்டம் உயர்த்தப்படவில்லை, சிமெண்ட் கலவைகள் சரியாக இல்லை.. பில்லர்களில் கம்பிகள் குறைவாக சேர்க்கப்படுகிறது போன்ற அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை அளித்தனர்.
இதன்பிறகு அதிகாரிகள் கட்டுமான பணி செய்யும் ஒப்பந்ததாரர் எங்களை அணுகாமலே கட்டி வருகிறார் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கட்டும் பணிகளுக்கு மட்டும் பில் போடுவோம் என்று உறுதி அளித்ததோடு, நீங்கள் விரும்பும்படி உங்களின் ஆலோசனையை பெற்று பள்ளி கட்டிடத்தை கட்டித் தருகிறோம் நீங்களே அருகில் இருந்து கண்காணித்துக் கொள்ளலாம் என உறுதி அளித்தனர்.
அதற்கு அப்பகுதி மக்கள் பள்ளி கட்டிடம் தரமாக கட்டி தரப்பட வேண்டும், 100 ஆண்டுகள் உழைக்கும் வகையில் இருக்க வேண்டும், உங்களுக்கு நிதி பற்றாக்குறை என்றாலும் நாங்கள் பகுதி மக்கள் பணம் வசூலித்து உதவி அளிக்கிறோம் என கூறிக் கொண்டனர்.
சின்னசேலம் காந்தி நகரில் அரசு பள்ளி கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக பகுதி மக்கள் கட்டிடப் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளை வரவழைத்து பள்ளிக்கட்டி டத்தை தரமாக கட்டி தர கோரிக்கை வைத்து அதற்கு அதிகாரிகள் உடன்பட்டு சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.