BREAKING NEWS

சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்.

சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்தி வாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ந்தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறை முகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

சீன உளவுக் கப்பலின் வருகை, இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடும். சீனக் கப்பலின் இலங்கை வருகை என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன் படிக்கையை மீறிய செயல் ஆகும். சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987-ஆம் ஆண்டு இந்திய, இலங்கை அமைதி உடன் பாட்டிற்கு எதிரான செயலாகும்.

 

 

அந்த உடன்பாட்டின்படி இலங்கை மண்ணை இந்திய ஒற்றுமை, ஒருமைப் பாட்டுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது. வடக்கில் லடாக் பகுதியில், இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவி தொல்லை கொடுத்து வரும் சீனா, தெற்கில் இலங்கையிலிருந்து தொல்லை கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

 

 

இலங்கை என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கான கேடயமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, இந்தியா மீதான தாக்குதலுக்கான தளமாக மாறிவிடக் கூடாது. இதை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தான் இந்தியா பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்க வேண்டும்.

 

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 11-ந்தேதி வரவிருக்கும் சீன உளவுக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சீனக் கப்பலை இலங்கை அனுமதித்தால், இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எத்தகைய கடினமான நடவடிக்கையையும் எடுப்பதற்கு மத்திய அரசு தயங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )