செங்கல்பட்டு அருகே மின்சாரத்தை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை.
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் சிங்கப்பெருமாள் கோவில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகத்சிங் நகர் பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்களுக்கு சாலைவசதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் ஊராட்சி நிர்வாகம் தரப்பில் செய்து வருகின்றது.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டங்களில், இந்த நிலத்தின் வகையை மாற்ற வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று மின்சாரத்துறை சார்பில் அப்பகுதி வீடுகளில் இருக்கும் மின்சாரத்தை துண்டிக்க காவல்துறையுடன் வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
மேலும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பரபரப்பு நிலவியதால் மின்சாரத்தை துண்டிக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து, காவலர்கள் மற்றும் மின் அலுவலர்கள் திரும்ப சென்றனர்.