செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தற்காலிக ஊழியர் வெட்டி படுகொலை – பொதுமக்கள் சாலை மறியலால் பதட்டம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வரும் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (25) இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தபோது நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அதிரடியாக புகுந்த டிப் டாப் ஆசாமிகள் ராஜேசை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் செங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஷின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷின் உறவினர்கள் தற்போது செங்கோட்டை பேரூந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிவரும் நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சாலை மறியலில் ஈடுபட்டு வரும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இருந்தபோதும் நகராட்சி அலுவலகத்தில் வைத்து ஒரு நபர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் எதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார் முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.