செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சமூக மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் ஆபிரகாம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெறப்பட்ட படிவங்கள் தொடர்பாக களஆய்வு மேற்கொண்டு, புதிய வாக்காளர் சேர்க்கும் பணி சரியாக நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்தார்.
அதன்படி தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே ஆறுபாதி கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களான இந்து ஆதியன் வகுப்பை சேர்ந்த 11 பேருக்கு ஆதார் அட்டை எடுக்கப்பட்டு, வாக்காளர் அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் பெறப்பட்டது. மேற்படி விண்ணப்பத்தை ஆய்வு செய்து புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்ட நபர்களிடம் விவரங்களை சேகரித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, தொடர்பு அலுவலரும், தலைமையிடத்து துணை வட்டாட்சியருமான பாபு, தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயராணி, வருவாய் ஆய்வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர்கள் சிவசங்கர், ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.