சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி…
சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்ன கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் அதிகாலை 8 நபர்களுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியில் மோதி விபத்துக்குளானது.
இதில் சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் போலீசார் விசாரணையில் சேலம் அருகே கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டுதெருவைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சி மண்டலம் 4ல் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை குட்டம்பாளையம் ஈங்கூர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகள் பிரியா (வயது25) என்பவருக்கும் திருமணமாகி சஞ்சனா (வயது1) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜதுரைக்கும், பிரியாவுக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராஜதுரை தனது மாமனார் பழனிச்சாமி மாமியார் பாப்பாத்தியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, பழனிச்சாமி (வயது52) இவரது மனைவி பாப்பாத்தி (47) ஆகியோர் தனது உறவினர்களான ஆறுமுகம்(50), இவரது மனைவி மஞ்சளா (42), செல்வராஜ்(55), விக்னேஷ்(20) ஆகியோருடன் ஆம்ன் வேனில் பெருந்துறையில் இருந்து சேலம் கொண்டலாம்பட்டி சென்று மகள், மருமகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனையடுத்து தனது மகள் பிரியா, பேத்தி சஞ்சனாவை பெருந்துறை அழைத்துச் செல்வதாக கூறி, சேலத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். ஆம்னி வேனை விக்னேஷ் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே சின்னாக்கவுண்டனுார் பைபாஸ் என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் பின் பக்கத்தில் ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் பழனிச்சாமி(52), பாப்பாத்தி(47), ஆறுமுகம்(50), மஞ்சுளா(42), செல்வராஜ்(55), சஞ்சனா(1) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ஆம்னி வேன் டிரைவர் விக்னேஷ்(20), மற்றும் பிரியா(25) ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 6 பேரின் உடலை சங்ககிரி அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைத்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி ராஜா, தாசில்தார் அறுவடை நம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த ஈச்சர் லாரியை டிரைவர் எடுத்துச் சென்றுவிட்டார்.
அதனால், சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விபத்து காரணமான லாரியை தேடி வருகின்றனர். சங்ககிரி அருகே நள்ளிரவில் நடந்த கோர சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6பேர் உயிரழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…