சேலம் வழியாக சென்ற ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்.

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை சார்பிலும், ரெயில்வே காவல்துறை சார்பிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினர் தொடர்ந்து ரெயில்களில் சோதனை நடத்தி கஞ்சா கடத்தல் கும்பலை கண்டுபிடித்து வேட்டையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்கு சேலம் வழியாக செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் முத்துவேல், கண்ணன், சக்திவேல் ஆகியோர் இன்று காலை அந்த ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது.
அந்த பையை சோதனை செய்தபோது, அதில் 5 பண்டல்களில் 9 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அந்த பையில் கஞ்சா கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
