சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் அருள்பாலிக்கிறார் மற்றும் சிறிய மலையில் யோகஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலின் பிரம்மோற்சவம் உள்ளிட்ட அனைத்து உற்சவங்களும் சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உற்சவர் பக்தோசித பெருமாள் கோயிலில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வருடாந்திர சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசிதப்பெருமாள் கிளி கூண்டு வாகனத்தில் மலைக்கோயிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் தீபஆராதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பெரிய மலை மீது உள்ள கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றம் சிறப்பு பூஜைகளுடன் சிறப்பாக நடந்தேறியது. பின்னர் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் பெரிய மலை சன்னிதானத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீசக்கரத்தாழ்வார் மலைக்கோவிலில் இருந்து உற்சவர் கோயிலுக்கு எழுந்தருளியதும் கண்ணன் புறப்பாடு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு சப்ர உற்சவம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே மாதம் 2 ந்தேதி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஜெயா மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
