ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு நடவடிக்கை விதிமுறை மீறலால் வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம்.

வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம்.
வேலூர் மாவட்டம்; விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாமல் எருதுவிடும் விழாக்கள் நடத்தப்பட்டதை அடுத்து ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட விழாக்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள கிராமங்களில் அடுத்தடுத்த நாட்களில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள எருது விடும் விழாக்கள் நடக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையை அடுத்து எருதுவிடும் விழாக்கள் நடத்தப்படும். ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இந்த எருதுவிடும் விழாக்கள் நடப்பது வழக்கம்.
இதற்காக விழாக்குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விழா நடத்தப்படும். அதன்படி இவ்வாண்டு வேலூர் மாவட்டத்தில் 78 கிராமங்களில் விழா நடத்த அனுமதிக்க வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது.
இதில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் வரை 43 கிராமங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் வரை 42 கிராமங்களிலும் எருதுவிடும் விழாக்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், எருதுவிடும் விழாக்கள் அனுமதிக்கப்பட்ட கிராமங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காட்பாடி வட்டம் கழிஞ்சூர், அணைக்கட்டு வட்டம் பென்னத்தூர், மேட்டுஇடையாம்பட்டி ஆகிய இடங்களில் எருது விடும் விழாக்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில், கழிஞ்சூரில் காலை 9.30 மணிக்கு எருது விடும் விழா தொடங்கியதும் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் அதிகாரிகளும், விழாக்குழுவினரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள், அண்டை மாநிலமான ஆந்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகள் வாடிவாசலில் இருந்து இலக்குகளை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது இருபுறமும் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் நின்று கொண்டு காளைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் எருதுவிடும் விழாவை ஆய்வு செய்வதற்காக மத்திய பிராணிகள் நல வாரிய மண்டலத் தலைவரும், ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழுவின் தமிழக பார்வையாளருமான மிட்டல் வந்திருந்தார். அவர் முதலில் கழிஞ்சூரில் நடைபெற்ற விழாவை ஆய்வு செய்தபோது, அங்கு எருதுவிடும் விழா நடத்துவதற்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்தது.
குறிப்பாக, தடுப்பு வேலிகள் முறையாக அமைக்கப்படாமல் இருந்ததும், தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டிருந்த பகுதிகளிலும் அதனை கடந்து பொதுமக்கள் காளைகள் ஓடுவரும் பாதையில் கூட்டமாக நின்று கொண்டு ஆராவாரம் செய்ததும், விழாவில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருந்தது போன்ற விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு பார்வையாளர் மிட்டல் உத்தரவின்பேரில் கழிஞ்சூர் எருதுவிடும் வழா காலை 11.45 மணியளவில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, பென்னாத்தூரில் நடைபெற்ற எருதுவிடும் விழாவையும் மிட்டல் ஆய்வு செய்தார். அங்கும் விதிமுறை மீறல் கண்டறியப்பட்ட நிலையில் பென்னாத்தூர், மேட்டுஇடையாம்பட்டி என சனிக்கிழ மை அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று இடங்களிலும் எருதுவிடும் விழாக்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, கழிஞ்சூரில் மட்டும் தடுப்பு வேலிகள் சரிசெய்யப்பட்டு, விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து ஒருமணி நேரத்திற்கு பிறகு எருதுவிடும் விழாவை தொடர் ந்து நடத்திட அனுமதிக்கப்பட்டது. எனினும், பென்னாத்தூர், மேட்டுஇடையாம்பட்டி ஆகிய இரு இடங்களில் எருதுவிடும் விழாக்கள் நடத்தப்படவில்லை. இச்சம்பவத்தை அடுத்து மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அடுத்தடுத்த நாட்களில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள எருதுவிடும் விழாக்கள் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.