ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.
ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் காளி ஆட்டத்துடன் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு காளி ஆட்டத்துடன் காத்தவராயர் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கிராம நாட்டாண்மைகள் மற்றும் ஊராட்சி முக்கியஸ்தர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு பக்தியோடு அம்மன் – காத்தவராயர் கதை பாரத பூசாரிகளால் பாடப்பட்டு வந்த நிலையில் இன்று காத்தவராயர் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 11 நடன கலைஞர்கள் அம்மனது அவதார வேஷங்கள் இட்டும், ஒருவர் சிவன் வேஷமிட்டும், பாரத பூசாரியர் காத்தவராயன் வேஷமிட்டும் பிரமாண்டமாக நடன கலைகள் நிகழ்த்தி கழுகு மரம் ஏறி பக்தர்களை மகிழ்வித்தனர்.
இந்நிகழ்வில் அம்மனது பக்தர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் பெரும் திரளாக கலந்து கொண்டு அம்மனது அருளாசி பெற்று சென்றனர்.