ஜெயலலிதா ஹெல்த் விஷயத்தில் மூடுமந்திரம் எதற்கு..? அன்றே அலர்ட் செய்த கலைஞர் கருணாநிதி! அதிமுக அலட்சியம்!

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஜெயலலிதா உடல்நலம் விவகாரத்தில் மூடுமந்திரம் எதற்கு எனக் கேட்டு ஒரு அறிக்கை விடுத்திருந்தார் கலைஞர் கருணாநிதி..
அந்த அறிக்கையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயலலிதாவுக்கு என்ன பிரச்சனை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன என்பதையெல்லாம் நாட்டுமக்களுக்கும், அதிமுகவினருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கலைஞர் கருணாநிதி கேட்டிருந்தார்.
இன்று அன்று அவர் வெளியிட்ட அறிக்கையும் பதிவிட்ட ட்வீட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் விவரம் வருமாறு;
அப்பல்லோ மருத்துவமனை..
”தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு வார காலத்திற்கும் மேலாக – கடந்த 22ஆம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்குச் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவ மனையிலே இருக்க வேண்டுமென்று அப்பல்லோ மருத்துவ மனை தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதே நேரத்தில் முதலமைச்சர் மருத்துவ மனையில் இருந்தவாறே காவிரி பற்றி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், டெல்லியில் அவர் ஆற்ற வேண்டிய உரையினை அவரே ‘டிக்டேட்’ செய்த தாகவும் செய்தி வருகிறது.”
புகைப்படம் இல்லை
”ஆனால் சாதாரண சந்திப்பையும், அதிகாரிகளுடனான கூட்டத்தையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், முதலமைச்சர் அவ்வாறு மருத்துவமனையிலேயே ஆலோசனை நடத்திய புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை. மருத்துவமனையிலே அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள, அவருடைய கட்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பரிதவிப்பிலும், குழப்பத்திலும் இருக்கிறார்கள். அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா மருத்துவ மனையில் இருக்கின்ற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தைப் போக்கிட யாரும் முன் வரவில்லை.”
மூடு மந்திரம் எதற்கு
”ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சரை தமிழக ஆளுநர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை. ஏன், அ.தி.மு.க. வின் தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட அவரைக் கண்டு பேசியதாக செய்தி வரவில்லை. இவ்வாறு ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள்.”
ஏன் அறிவிக்கவில்லை
”அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற வகையிலாவது சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்க வேண்டும். மேலும் முதல் அமைச்சர் இத்தனை நாட்கள் மருத்துவ மனையிலே சிகிச்சை பெறுவது பற்றி மரபுகளை அனுசரித்து முறைப்படி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பிலே உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை. ”
முதலமைச்சரை பார்க்கவில்லை
”மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜெயலலிதாவைப் பார்க்க மருத்துவ மனைக்கே சென்றதாகத் செய்தி வந்ததே தவிர, அவர் முதல் அமைச்சரை நேரில் பார்த்து நலம் விசாரித்ததாகச் செய்திகள் இல்லை. அவரைப் போலவே வேறு பலரும் மருத்துவ மனைக்குச் சென்றார்கள் என்று செய்தி வருகிறதே தவிர, யாரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்து நலம் விசாரித்ததாகச் செய்தி இல்லை. அ.தி.மு.க. வின் அவைத்தலைவரே, செய்தியாளரிடம் இதுவரை யாரும் முதல் அமைச்சரைப் பார்க்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். ”
வீண் வதந்திகள்
”இதன் காரணமாக வேண்டாதவர்கள் தேவையில்லாமல் சமூக வலை தளம் உள்ளிட்டவற்றின் மூலமாக வீண் வதந்திகளைப் பரப்பி, அதை நம்பிக் கொண்டு அவருடைய கட்சித் தொண்டர்களே வேதனையடைகின்றனர். வீண் வதந்திகள் பரப்புவோர் யாரையும் இதுவரை காவல் துறை கண்டு பிடிக்கவில்லை.
இந்த வதந்திகளுக்கு முடிவு கட்டிடும் வகையிலாவது தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சரின் உடல் நிலை குறித்து தக்க ஆதாரங்களோடு செய்தியாளர்கள் வாயிலாக நல்ல தகவலை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க முன் வர வேண்டும்.