தஞ்சாவூரில் அரசுப் பள்ளி ஒன்றில் விசாரணைக்காக வந்த போலீஸார் மாணவர்களை தனி அறையில் வைத்து அடித்ததாக வெளியான தகவல் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அண்ணா நகரில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுக்கு வரை 500 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். பத்துக்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கும் சரண்யா என்பவரின் தலை மேல் கல் ஒன்று விழுந்துள்ளது. இதில் லேசான காயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் யாரோ தான் தன் மீது கல்வீசியதாக சரண்யா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை லஞ்ச ஒழிப்புதுறையில் இன்ஸ்பெக்டராக இருக்கும் தன் கணவரிடம் சரண்யா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வல்லம் காவல் நிலைய போலீஸாருக்கு லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் தகவல் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து போலீஸ் உடை அணியாமல் மப்டியில் வந்த நான்கு போலீஸார் பள்ளிக்குள் சென்று குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களை போலீஸார் அடித்தாக சொல்லப்படுகிறது.
இது மாணவர்களின் பெற்றோருக்கு தெரிய வர நேற்று பள்ளியை முற்றுகையிட்டதுடன் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெற்றோர் தரப்பில் பேசினோம், கடந்த 7ம் தேதி பள்ளி மைதானத்தில் நடந்து சென்ற ஆசிரியர் சரண்யாவின் தலை மீது கல் ஒன்று விழுந்துள்ளது. மாணவர்களில் யாரோ ஒருவர் தான் தன் மீது கல்வீசியதாக சரண்யா சொல்லியிருக்கிறார்.
இதனை தன் கணவரிடமும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிக்கு வந்த வல்லம் போலீஸார் 15 மாணவர்களை அழைத்து தனி அறையில் விசாரித்துள்ளனர். அந்த அறையில் வேறு ஆசிரியர்கள் யாரையும் வைத்து கொள்ளவில்லை. பின்னர் 15 மாணவர்களையும் கதவை சாத்திக்கொண்டு போலீஸார் யார் கல் வீசியது உண்மையை சொல்லுங்கள் என கேட்டு அடித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம்.
விளையாடும் போது யதேச்சையாக ஆசிரியர் சரண்யா மீது கல் விழுந்ததா அல்லது வேறு யாரேனும் வீசினார்களா என சரியாக எதுவும் தெரியாத நிலையில் மாணவர்களை பள்ளிக்குள் வைத்தே அதுவும் குற்றவாளிகளை போல் போலீஸார் அடித்துள்ளனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது. அத்துடன் நடந்த இந்த சம்பவத்தை வெளியே தெரியாமல் மறைத்து விட முயன்றுள்ளனர்.
எங்கள் பிள்ளைகள் அழுது கொண்டு எங்களிடம் தெரிவித்ததால் எங்களுக்கு தெரிய வந்தது. ஆசிரியர்களை நம்பி தான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அதுவும் அரசுப்பள்ளியிலேயே இது போன்ற அவலம் நடந்திருப்பது தான் எங்களுக்கு பெரும் வேதனையாக இருக்கிறது. உரிய விசாரணை நடத்தி உண்மையில் கல் எறிந்திருந்தால் அது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. முழுமையாக விசாரணையே நடத்தாமல் எங்கள் பிள்ளைகளை போலீஸ் அடித்ததை எங்களால் எப்படி பொறுத்து கொள்ள முடியும். அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் இதில் உரிய கவனம் செலுத்தி விசாரணை நடத்தி நடந்து என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
இது குறித்து வல்லம் டி.எஸ்.பி. நித்யாவிடம் பேசினோம், ஆசிரியர்கள் முன்னிலையில் தான் போலீஸார் மாணவர்களிடம் விசாரணை செய்துள்ளனர் ஆனால் அவர்களை அடிக்கவில்லை. மாணவர்கள் மீது வழக்கு பதிந்திவிடக் கூடாது என்பதற்காக பெற்றோர்கள் இதனை திசை திருப்புவதாக தெரிவித்தனர். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் மதன் குமாரிடம் பேசினோம், ஆசிரியரின் தலையில் கல் விழுந்ததா அல்லது மரத்திலிருந்து காய் எதுவும் விழுந்ததா என யாருக்கும் தெரியவில்லை.
மாணவர்கள் கல் எறிந்தார்கள் என்பதற்கான உறுதியான தகவலும் இல்லை. அல்லது விளையாட்டு நேரத்தில் விளையாடும் போது கல் பட்டதா என்றும் தெரியவில்லை. ஆனால் ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களிடம் போலீஸார் விசாரணை மட்டும் தான் செய்தனர். மாணவர்களை அடித்தால் இந்நேரம் பெரிய பரபரப்பாகியிருக்கும். பள்ளியின் பெயரை சீர்குலைக்க யாரோ சிலர் மாணவர்களை போலீஸார் அடித்ததாக கிளப்பி விடுகின்றனர் என்றார்.