தனி நலவாரிய கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என நடைபெற்ற இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களில் கூட்டமைப்பின் முப்பெரும் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேச்சு.

மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு தோழமை சங்கங்கள் இணைப்பு விழா நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் கூட்டத்தின் இறுதியில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதனை கோரிக்கை மனுவாக அமைச்சரிடம் வழங்கினர்.
முன்னதாக பேசிய அமைச்சர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் தனி நல வாரிய கோரிக்கை தமிழகம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு கல்வி ,விபத்து, ஓய்வூதியம் உள்ளிட்ட உதவி தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 50,000 பேருக்கு உதவி தொகைகள் வழங்கப்பட்டு, எஞ்சிய தொழிலாளர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், நிவேதா எம்.முருகன், ராஜ்குமார், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.