தன்னிச்சையாக பேட்டி கொடுத்த சுந்தரேசன் கூறுவது எல்லாம் உண்மை அல்ல.

அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் என்பவரது வாகனத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஐபி பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு பழுதடைந்த வாகனத்தை கொடுத்ததாகவும் அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று டிஎஸ்பி மீண்டும் காவல்துறையில் ஒப்படைத்துவிட்டு பணிகளை கவனிக்க வீட்டிலிருந்து நடந்து வந்தார்.
இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில், காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கில் தனது விசாரணை அறிக்கையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் உளவுத்துறை ஐஜி செந்தில்வேல் ஆகியோர் தூண்டுதல் பெயரில் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக தன்னை டார்ச்சர் செய்வதாக பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார்.
நேர்மையான போலீஸ் அதிகாரியான தனக்கு நான்கு மாதம் சம்பளம் வழங்கப்படாத நிலையில் தான் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் ஆனால் நான் ஓய்வூதியம் பெறக்கூடாது என்பதற்காக சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தான் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தனக்கு தனது உயிர் முக்கியம் இல்லை என்றும், ஆனால் தனது குடும்பத்திற்கு தன்உயிர் முக்கியம் எனவும், வளைந்து செல்லாவிட்டால் ஒடிக்கப்படுவீர்கள் என மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தனக்கு சைகை காட்டியதாகவும்,
லஞ்சம் ஊழல் இவற்றில் இருக்கும் அதிகாரிகளுக்கு வசூல் செய்யாத நேர்மையான காவல்துறையினர் பழிவாங்கப்படுவார்கள், தான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன் என்றும் தெரிந்துதான் இந்த பேட்டி அளிப்பதாகவும் டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மயிலாடுதுறை காவல்துறை சார்பில் இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கும்போது டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டதாகவும்,
அவர் மீது என்ன விதமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விசாரணைக்கு பின்னே தெரியவரும் என்றும், லஞ்சம் ஊழல் எதுவும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லை அவர் தவறாக தெரிவிக்கிறார் என்றும் மறுப்பு தெரிவித்தார்.