தமிழக அரசுக்கு ஓபிஎஸ். கோரிக்கை! மத்திய அரசைப் போல பெட்ரோல் விலையைக் குறையுங்க!
தமிழக அரசுக்கு ஓபிஎஸ். கோரிக்கை! மத்திய அரசைப் போல பெட்ரோல் விலையைக் குறையுங்க!
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது போல, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. தொடர் பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் . மத்திய அரசை எதிர்த்து கண்டனக் குரல்களும் எழும்பி வருகின்றன.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 45 நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசு கலால் வரியை குறைத்ததைத் தொடர்ந்து சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8 ரூபாய் 22 காசுகள் குறைந்து 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகள் குறைந்து 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பை தொடர்ந்து மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு ஆண்டுக்கு தலா ரூ. 200 மானியம் அளிக்கப்படும். இறக்குமதி சார்ந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மாநில அரசுகளும் வரிக்குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், தமிழக அரசும், மக்களின் சுமையைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.