தமிழக பொது சுகாதாரத் துறை இந்தியாவிலேயே முன்மாதிரியாக விளங்கி வருகிறது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேச்சு.
![தமிழக பொது சுகாதாரத் துறை இந்தியாவிலேயே முன்மாதிரியாக விளங்கி வருகிறது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேச்சு. தமிழக பொது சுகாதாரத் துறை இந்தியாவிலேயே முன்மாதிரியாக விளங்கி வருகிறது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேச்சு.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-22-at-12.01.09-PM.jpeg)
தஞ்சை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (1922 – 2022 ) நூற்றாண்டு விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.ச.நமச்சிவாயம் வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது:
நூறு ஆண்டுகள் என்பது சாதாரண நிகழ்வு அல்ல. இதில் பொது சுகாதாரத்துறை நூறு ஆண்டுகளை கடந்து வந்துள்ளது பெருமைக்குரியது. பெரிதும் மக்களை பாதித்த நோய்களான பெரியம்மை, காலரா முழுமையாக இல்லாமல் போனதற்கு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்புத் துறையே காரணம். மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் கல்வியும் , சுகாதாரமும் அரசின் இரு கண்கள் என்றார்.
அந்தளவிற்கு பொது சுகாதாரத் துறைக்கு முதல்வர் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் என்பதை நாம் காண முடிகிறது. தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை தான் இந்தியாவிலேயே முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. இந்த நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். என்னவென்றால், தஞ்சை மாவட்டம் உள்நாட்டு மீன் உற்பத்தியில் தேசிய அளவில் விருது பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கூடுதல் இயக்குனர் கணேசன், இணை இயக்குனர் சகாயம் மேரி ரீட்டா (ஓய்வு), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை இயக்குனரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
விழா நிகழ்ச்சிகளை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் ஆடலரசி, பட்டுக்கோட்டை வட்டார சுகாதார மேற்பரையாளர் அண்ணாதுரை, தொழுநோய் தடுப்புப் பணிகள் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் முபாரக் அலி ஆகியோ தொகுத்து வழங்கினர். முன்னதாக காலையில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இருந்து நூற்றாண்டு விழா பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தது.