BREAKING NEWS

தமிழ்நாடு என்ற சொல் குறித்து கவர்னரின் பேச்சு கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு என்ற சொல் குறித்து கவர்னரின் பேச்சு கண்டனத்துக்குரியது.

 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்று பேசியிருக்கிறார்.

 

அவர் தன்னை ஆளுநர் என்பதை மறந்து பாஜகவின் அடிமட்டத் தொண்டரைப் போல பேசிக் கொண்டிருக்கிறார். இந்த பேச்சு பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் பேசப்பட்டிருக்க வேண்டியது. ஆளுநர் மாளிகையில் அல்ல.

 

அரசியல் சாசனப் பதவியில் அமர்ந்து கொண்டு தீவிர சார்பு அரசியல் பேசி கண்ணியமிக்கப் பதவிக்கு இழுக்கை தேடி தந்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர் என் ரவி.

தமிழ்நாடு என்ற பெயர் மாநிலத்துக்கு சூட்டப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த உயிர்த் தியாகம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் முக்கிய இடம் உண்டு.

 

மெட்ராஸ் மாகாணம் என்பது கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணம் என்றே தமிழ்நாடு அழைக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதற்காக 1956-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி சங்கரலிங்கனார். உண்ணாநிலை அறப்போராட்டத்தை விருதுநகரில் நடத்தினர்.76 நாள்கள் தொடர்ந்து நடத்தியதால் அவரது உயிர் பிரிந்தது.தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

 

அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1968-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக ஒருவர் உயிர்த் தியாகமே செய்திருக்கிறார். பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அப்போதுகூட, தமிழகம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லை.

 

பா.ஜ.க வின் பிரித்தாலும் சூழ்ச்சியை ஆளுநர் அவர்கள் முன்னெடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது . தனது ஆரிய சார்பு கருத்துகளைப் பரப்பும் விதமாக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல. தொடர்ந்து திராவிட இயக்க கருத்தியலை எதிர்த்து வரும் தமிழக ஆளுநருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS