தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 10-ஆவது பட்டமளிப்பு விழா, மத்தியப் பல்கலைக்கழகத்தின் மேன்மையரும், மாண்புமிகு குடியரசுத் தலைவருமான திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தரும், பத்மபூஷண் மற்றும் விஞ்ஞான் ரத்னா விருதுகளைப் பெற்றவருமான பேராசிரியர். ஜி. பத்மநாபன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் முதலாவதாக பேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் பல்கலைக்கழக குறித்தும் மாணவர்களின் சாதனைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 45 மாணவ மாணவிகளுக்கு தங்க பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் வணக்கம் என்று கூறி உரையை தொடங்கிய குடியரசுத் தலைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளம் பட்டதாரிகளின் பொறுப்புகளை எடுத்துரைத்து, உத்வேகமான பட்டமளிப்பு விழா உரையை வழங்கினார். அப்போது பல்கலைக்கழகத்தில் முதன்மை மாணவர்களாகத் திகழ்ந்தவர்களுக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் தங்கப் பதக்கங்களை வழங்கி, அவர்களின் ஆய்வு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டினார்.
இந்த ஆண்டு 1,010 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில் 568 பெண்கள் மற்றும் 442 ஆண்கள். இதில் 45 தங்கப் பதக்கம் வென்றவர்கள் (34 பெண்கள் மற்றும் 11 ஆண்கள்) மற்றும் 44 முனைவர் பட்ட மாணவர்கள் (27 பெண்கள் மற்றும் 17 ஆண்கள்) ஆகியோருக்கு ஆய்வு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவர்கள் அனைவரும் ஆராய்ச்சிக்கான தங்களின் பங்களிப்புகளுக்காகப் பாராட்டப்பட்டனர். 771 மாணவர்கள் (454 பெண்கள் மற்றும் 317 ஆண்கள்) டிப்ளமோ, இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், தமிழ்நாடு அமைச்சர்கள் கோவி. செழியன், கீதா ஜீவன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், ஆய்வு பட்ட மாணவர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.