தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராஜபாளையத்தில் 336-வது ஆண்டாக கொண்டாடப்படும் சித்திரை வெண்குடை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சித்திரை முதல் நாள் வெண்குடை திருவிழா வருடம் தோறும் கொண்டாடப்படுவது வழக்கம். பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரே சமூகத்தை சேர்ந்த 7 தெருவினர் இணைந்து கொண்டாடும் இந்த விழா 336- வது ஆண்டாக இன்று நடைபெற்றது.
அலங்கரிக்கப் பட்ட அய்யனார் சுவாமி வெண் குதிரையில் ஏறி பூச்சப்பரத்தில் உலா வர, சப்பரத்தின் முன்பாக காலில் சதங்கை அணிந்த நபர் வெண் குடையுடன் நடனமாடிய படி ஊர்வலமாக வந்தார். அதனை தொடர்ந்து, பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம், பொய்கால் குதிரை, மயிலாட்டம், ஆலி பொம்மை ஆட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களுடன், கேரள செண்டை மேள குழுவினரும் ஊர்வலமாக வந்தனர்.
சீனிவாசன் புது தெருவில் உள்ள பொது சாவடியில் இருந்து மேளதாளத்துடன் புறப்பட்ட நீர்காத்த அய்யனார் சுவாமி அலங்கார வாகனம் சீனிவாசன் புதுத்தெரு, ஆனையூர் தெரு, மாடசாமி கோவில் தெரு, அம்மன் பொட்டல் தெரு, மத்திய வடக்குத்தெரு, வழியாக காமாட்சி அம்மன் கோவில் தெரு பெரியகடை பஜார் பொன்விழா மைதானம் முடங்கியாறு சாலை வழியாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள நீர் காத்த அய்யனார் சுவாமி கோயில் வரை சென்றது.
வழிபாடு முடிந்ததும் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வாழவந்தான் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்னர் சீனிவாசன் புது தெரு மண்டபத்திற்கு வந்து அடையும்.
டிஎஸ்பி ப்ரீத்தி தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் என 850 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காந்தி சிலை முதல், மதுரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு டி.பி மில்ஸ் சாலை, ரயில்வே பீடர் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப் பட்டிருந்தது.
ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.