திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து: விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாப பலி.
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை 6 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. தலைமை தபால் நிலையம் கடந்து சென்ற போது தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன் (35) என்பவர் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் மீது மோதிய பேருந்து அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்து மீதும் பெட்ரோல் பங்க் முன்பு இருந்த தடுப்பு மீதும் மோதி நின்றது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பெட்ரோல் நிலையம் முன்பு கூடினர். தனியார் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு சிலர் பேருந்து ஓட்டுனரை தாக்கியுள்ளனர் இதில் பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தகவல் அறிந்த திருச்சி மாநகரத்திற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பேருந்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உயிரிழந்த மோகன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் இருந்த மோகனுக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (27)என்ற மனைவி உள்ளார்.
இன்று காலை திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் இருந்து ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி எதிரே உள்ள முனீஸ்வரன் கோவில் பகுதியில் குடிநீர் எடுப்பதற்காக வந்தார். குடிநீர் எடுத்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விபத்து மற்றொரு தனியார் பேருந்துடன் ஏற்பட்ட போட்டி காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.