திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை கடும்வீழ்ச்சி : பொதுமக்கள் மகிழ்ச்சி.

சுற்றுவட்டார மாவட்டங்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதில் திருச்சி காந்தி சந்தை பெரும் பங்காற்றி வருகிறது. இங்கு மாநகர மக்கள் அதிக அளவு சென்று காய்கறி வாங்குகின்றனர். அதேபோன்று வியாபாரிகளும் காந்தி சந்தை மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக மலிவு விலையில் காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்களும் இல்லத்தரசிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று மேலும் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ சுரக்காய் ரூ.3-க்கு விற்கப்பட்டது. வரி கத்திரிக்காய் ரூ.10-க்கும் மணப்பாறை கத்திரிக்காய் ரூ.20-க்கும், தக்காளி ரூ.8 முதல் ரூ.10-க்கும் சில்லறை விலையில் விற்கப்பட்டது.
தக்காளி விலை வீழ்ச்சி தொடர்பாக தக்காளி மண்டி வியாபாரி ஹலீலுல் ரகுமான் கூறும் போது, ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி வி.கோட்டா பகுதிகளில் அதிக அளவு தக்காளி விளைச்சல் அடைந்துள்ளது. இன்னும் தக்காளி சீசன் 2 மாதத்திற்கு தொடர்ந்து இருக்கும். 27 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200 மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்து பயிர்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே விலை உயரும் வாய்ப்பு உள்ளது. மழை பெய்யாவிட்டால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இதே விலை நீடிக்கும்.
தக்காளி விளைந்துள்ளதால் அங்குள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் நிறைய விவசாயிகள் தக்காளி அறுவடையை நிறுத்தி விட்டார்கள். சொந்த வாகனமும் வைத்திருப்பவர்கள் தொழிலாளர்கள் நலன் கருதி லோடு அனுப்புகிறார்கள் என்றார்.
மேலும் பெரும்பாலான காய்கறிகள் சராசரியாக கிலோ ஒரு 19க்கு கீழ் விற்கப்படுகிறது. அவரக்காய் ரூ.50க்கும், பீன்ஸ் ரூ. 50க்கும்அதிகபட்சமாக விற்கப்படுகிறது. கேரட் ரூ.15, பீட்ரூட் ரூ.15, சவ்சவ் ரூ.12 விலைக்கு விற்கப்படுகிறது. முட்டைக்கோஸ் விளையும் இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. 90 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை முட்டைக்கோஸ் ரூம் 300 மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் இல்லத்தரசிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.