திருச்சி பி.ஹெச்.இ.எல் தொழிலகப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் அவசரகால தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.

திருச்சியில் இயங்கி வரும் பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தயார் நிலையைச் சோதித்திட அவசரகால தீயணைப்பு ஒத்திகை, பிரிவின் உயரழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு-2ல் உள்ள எரிவாயுக் களத்தில் இன்று 15.12.2022 நடத்தப்பட்டது.
அரசு நிறுவனங்களுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இயங்கும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, எச்ஏபிபி மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவற்றின் தீயணைப்புக் குழுக்கள் பி.ஹெச்.இ.எல் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து பங்கேற்ற இந்த ஒத்திகையை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் ஆர்.சித்தார்த்தன், இணை இயக்குநர் திருமதி எஸ்.மாலதி மற்றும் துணை இயக்குநர் பி.தமிழ்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த ஒத்திகையில் திருச்சிப் பகுதியின் இந்திய எண்ணெய்க் கழகம், விமான நிலைய ஆணையம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, எச்ஏபிபி மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவற்றின் ஊழியர்களும் பார்வையாளர்களாக பங்கேற்றனர். ஆலையிலுள்ள தலா 50 டன் கொள்ளளவு கொண்ட இரண்டு திரவ எரிவாயுக் கலங்களில் நிகழும் அவசர நிலையை உருவகப்படுத்தி இந்தத் தீயணைப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய சித்தார்த்தன் விபத்து ஏற்பட்டால் அவசரகால நடைமுறைகள் கண்டிப்பாக
பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய அவசரகால ஒத்திகைகள் மிகவும் முக்கியமானவை என்றும், அனைத்து தொழில் நிறுவனங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த இவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.
கள கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயல்பாடுகளுக்கான பொதுமேலாளர்-பொறுப்பு எஸ்.எம்.ராமநாதன், பிஹெச்இஎல் திருச்சிப் பிரிவில் திரவ எரிவாயு சேமிப்பானது கடுமையான நெறிமுறைகளுக்கு இணங்க அனைத்து பாதுகாப்பு தர நிர்ணயங்களின் படி பேணப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், ஒத்திகையின் போது தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்தின் மூத்த
அதிகாரிகளின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளில் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.
