திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் ஆக்கிரமிப்பு நகராட்சியினர் அகற்றம்; வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் முறையீடு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் உள்ள தட்டிகளை நகராட்சியினர் அகற்ற சொன்னதால் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் சாலையில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இன்று காலை நகராட்சி ஊழியர் ஒருவர் கடைகளின் முன்பக்கம் உள்ள தட்டிகளை திடீரென்று அகற்றச் சொன்னதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து திருவள்ளுவர் சாலை வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் (பொ) ஹரிஹரன் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
ஏற்கனவே கடும் கோடையின் காரணமாக வியாபாரம் பாதிப்படைந்து வரும் நிலையில் கடைகளின் முன்பக்க போடப்பட்டுள்ள தட்டிகளை அகற்றச் சொன்னால் மேலும் வியாபாரம் பாதிப்பாகும் என அவர்கள் முறையிட்டனர்.
இதன் பின்னர் வாறுகாலில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு இடையூறு இல்லாத வகையில் தட்டிப் பலகைகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்தினர். இதன் பின்னர் வியாபாரிகள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் திருவள்ளுவர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.