திருவிடைமருதுார் சட்டமன்ற தொகுதி முழுவதும் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் அறிவுரைப்படி செல்வமகள் சிறுசேமி்ப்பு திட்டம் தொடங்கப்படும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் கூறினார்.

திருவிடைமருதுார் வட்டம் திருலோக்கி குமரகுருபரர் சுவாமிகள் நடுநிலைப் பள்ளியில் நேற்று உள்ளாட்சி தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபா கூட்டம் தலைவர் ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது.
திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கோ.க.அண்ணாதுரை, அட்மா திட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலெட்சுமி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சுனுசுயா, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் எழிலன் ஆகியோர் பேசினர்.
தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பேசியதாவது:-
பெண்களிடம் சேமிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அஞ்சலகங்களில் செயல்படும் செல்வமகள் சிறுசேமிப்பு திட்டத்தில் மாதந்தோறும் பெண்கள் சேமிக்கும் கணக்கை தொடங்க வேண்டும்.
நமது திருவிடைமருதுார் தொகுதியில் இத்திட்டம் காமாட்சி, மரத்துறை ஊராட்சிகளில் தொடங்கப்பட்டு 1 வயது முதல் 10 வயது வரையிலான 135 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.500 வீதம் நான் எனது சொந்த நிதியில் இருந்து வழங்கி கணக்கு தொடங்கி கொடுத்துள்ளேன்.
அதேபோல வரும் 7ம் தேதி கஞ்சனுார், கோட்டூர், துகிலி, திருக்கோடிக்காவல், மணலுார் ஆகிய 5 ஊராட்சிகளில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
வரும் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை ஒட்டி இருமூலை, அத்திப்பாக்கம், முள்ளங்குடி, மதகுசாலை ஆகிய 4 ஊராட்சிகளில் தொடங்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் இத்திட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கி கொடுக்கலாம்.
அனைத்து ஊராட்சிகளிலும் பெண் குழந்தைகளை கண்டறிந்து திருவிடைமருதுார் சட்டமன்ற தொகுதி முழுவதும் 100 சதவீதம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கி கொடுக்கப்படும்.
மாதந்தோறும் குழந்தையின் பெற்றோர் தங்களால் முடிந்த தொகையை சிறுசேமிப்பு கணக்கில் செலுத்தி வர வேண்டும். குழந்தைக்கு 18 வயதாகும்போது உயர்கல்விக்கோ, திருமணத்திற்கோ தேவைப்படும் கணிசமான தொகை பெற்றோருக்கு கிடைக்கும் என்று கோவி.செழியன் கூறினார்.