திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்.
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதி வழியாக கூவம் ஆறு சென்னை நோக்கி செல்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் இந்த ஆறு சென்னையை நெருங்கும் வரை நல்ல தண்ணீர் ஆறாக உள்ளது . இதற்கு பிறகு கழிவுநீர் கலந்து சாக்கடை ஆறாக மாறி விடுகிறது.
திருவேற்காடு அருகே காடுவெட்டி பகுதியில் இன்று காலை கூவத்தில் செடிகளுக்கு மத்தியில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை கொண்டு கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் மட்டும் நான்கு டன்களுக்கு மேலாக மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை கொண்ட மீன்களாக இருந்தது. மேலும் செடிகளுக்கு மத்தியில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதால் செடிகளை அப்புறப்படுத்தி விட்டு செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.