தேனியில் நடைபெற்ற ” நெகிழியில்லா தேனி மாவட்டம் ” விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தேனி மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பதற்காக நெகிழியில்லா தேனி! மீண்டும் மஞ்சப்பை! என்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தானில் 10முதல் 45வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மில் மைதானத்தில் துவங்கிய இந்த மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக இயற்கை மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு விளைவிக்கும் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம் என்கிற உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
பழனிசெட்டிபட்டியில் துவங்கிய இந்த மினி மாரத்தான் தேனி பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு, மதுரை சாலை, புதிய பேருந்து நிலையம், திட்டச்சாலை வழியாக தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. சுமார் 5கி.மீ தூரம் வரையிலான இந்த மினி மாரத்தானில் முதலாவதாக வந்த 5நபர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார்.