தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்டு தனிநபர் பலருக்கு விற்பனை செய்த விவகாரத்தில் அந்த நிலங்களை அரசு புறம்போக்கு நிலம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று வடவீரநாயக்கன்பட்டியில் சம்பந்தப்பட்ட அரசு நிலத்தில் வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர். அப்போது நிலம் வாங்கியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தற்காலிகமாக வேலி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று வடவீரநாயக்கன்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து தலைமையில் வருவாய்த்துறையினர் அரசு நிலத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலி அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு இடத்தை சுத்தம் செய்து கல் நடும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துவதற்கு வந்த நிலம் வாங்கியவர்கள் 10 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.