BREAKING NEWS

தேனி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது.

தேனி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது.

அரசு மருத்துவர், சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரணை.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் (31). இவருக்கு அதே பகுதியில் சொந்தமான 2 ஏக்கர் 54 சென்ட் புஞ்சை நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.‌

 

இந்த நிலமானது, ஆதியில் அவரது முன்னோர்களான தாத்தா ஒச்சாத்தேவர், பெருமாள், வைரவன் மற்றும் இவரது தந்தை முருகன் ஆகியோர் மூலம் வழி, வழியாக அனுபவித்து வந்ததாகும். இதற்கிடையே கடந்த 1996ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிலத்தில் நிறுவனம் ஒன்று தொடங்க வேண்டும் என கன்னியாகுமரியை சேர்ந்த பிலிப் என்பவர் கேட்டதற்கு இனங்க, ரூபாய் 31,750க்கு ஜெயப்பிரகாஷின் முன்னோர்களான ஒச்சாத்தேவர், பெருமாள், வைரவன் உள்ளிட்டோர் கிரய ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

ஆனால் 25,000 ரூபாய் மட்டும் முன்பணம் கொடுத்து விட்டு மீதி பணம் ரூபாய் 6,750க்கு 6மாத கால அவகாசம் கோரியிருந்த நிலையில் கெடு முடிந்ததால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ஜெயப்பிரகாஷின் தாத்தா ஒச்சாத்தேவர் கடந்த 2016ஆம் ஆண்டும், அவரது தந்தை முருகன் 2020ஆம் ஆண்டு இயற்கை மரணம் அடைந்து விட்டனர். இதனிடையே அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவரான லோகநாதன், ஜெயப்பிரகாஷின் நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு கேட்டு அவர் கொடுக்க மறுத்துவிட்டார்.

 

இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் 21 ஆம் தேதியன்று தனது நிலத்திற்கான வில்லங்க சான்றிதழ் பெற்ற ஜெயப்பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். சம்பந்தப்பட்ட நிலத்தை சென்னையை சேர்ந்த அந்தோனி டாமினிக், பவர் ஏஜென்ட்டாக இருந்து கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியன்று அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் லோகநாதனின் மைத்துனரான பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த தங்கமாயன் என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்து விட்டதாகவும்,

 

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதியன்று தங்கமாயன் தனது மகன் சஞ்சய் சர்மாவுக்கு தான செட்டில்மென்ட் வழங்கியதாக இருந்த வில்லங்க சான்றை கண்டு பேரதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கேட்டதற்கு தங்கமாயன் மற்றும் லோகநாதன் ஆகியோர் ஜெயப்பிரகாஷை மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அவர் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

 

அதனடிப்படையில் தேனி குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு விசாரணை நடத்தினர். அதில் கடந்த 1996ஆம் ஆண்டு கன்னியாகுமரி பிலிப் என்பவருக்கு ஜெயப்பிரகாஷின் முன்னோர்களான ஒச்சாத்தேவர் பெருமாள் வைரவன் உள்ளிட்டோர் எழுதிக் கொடுத்த கிரய எக்ரிமெண்ட் பத்திரத்தை, சென்னையைச் சேர்ந்த அந்தோனி டாமினிக் என்பவருக்கு பொது அதிகார பத்திரம் ( பவர் ஏஜென்ட்) வழங்கியதாக மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

 

மேலும் சென்னையில் வசிக்கும் அந்தோனி டாமினிக், போடி அணைக்கரைப்பட்டியில் உள்ள பேருந்து நிலையத்தில் 1996ஆம் ஆண்டு எழுதப்பட்ட பவர் பத்திரங்களை தொலைத்ததாகவும், அதனை கண்டுபிடித்து தருமாறு போடி தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி புகார் அளித்து மனு ரசீது பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட 1996ஆம் ஆண்டு ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போடி தாலுகா காவல் ஆய்வாளரால் சான்று பெற்றுள்ளார்.

 

இதையடுத்து 2016 மற்றும் 2020ஆம் ஆண்டு உயிரிழந்த ஜெயப்பிரகாஷின் தாத்தா ஒச்சாத்தேவர், தந்தை முருகன் ஆகியோர் உயிருடன் இருப்பதாக கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று குரங்கனி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாபுவிடம் வாழ் நாள் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.

 

இது போன்று லோகநாதனின் தூண்டுதலில் மோசடியாக பெறப்பட்ட ஆவணங்களை கொண்டு போடியில் உள்ள பத்திர எழுத்தர் முருகன் மூலமாக கிரயப் பத்திரம் எழுதியுள்ளனர். பின் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியன்று தங்கமாயனுக்கு, போடியைச் சேர்ந்த குமரேசன், சீனிவாசன் ஆகியோர் பொய் சாட்சி கையெழுத்து போட அந்தோனி டாமினிக் கிரயம் செய்து கொடுத்ததாக போடி சார் -பதிவாளர் கார்த்திகேயன் பத்திரப் பதிவு செய்திருப்பது விசாரணை தெரியவந்தது.

 

இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதியன்று அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் லோகநாதன், சென்னையை சேர்ந்த அந்தோனி டாமினிக், வடுகபட்டி தங்கமாயன், குரங்கனி அரசு மருத்துவர் பாபு, போடி தாலுகா காவல் ஆய்வாளர், போடி சார் – பதிவாளர் கார்த்திகேயன், பத்திர எழுத்தர் முருகன், பொய் சாட்சி கையெழுத்திட்ட குமரேசன், சீனிவாசன் மற்றும் தான செட்டில்மென்ட் பெற்ற சஞ்சய் சர்மாவு ஆகிய 10பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.‌

 

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் லோகநாதனை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS