தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சேதமான கழிவுநீர்செல்லும் தடுப்புச் சுவர்.

செய்தியாளர் மு.பிரதீப்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், அசேன் உசேன் சாலையும், சுந்தரபாண்டியன் தெருவும் இணையும் இடத்தில் புதியதாக சாக்கடையில் தடுப்புச் சுவர் அமைத்து சிறு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்ட தடுப்புச்சுவர் இரண்டே நாட்களில் சேதம் அடைந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் ஏற்படுத்தி உள்ளது. நாள்தோறும் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இவ்வழியே சென்று வருவது வழக்கம்.
இது போன்ற தரமற்ற கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை பாரபட்சம் இன்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மேலும் போடி நகர மன்ற தலைவரும், நகராட்சி ஆணையாளரும், நகராட்சி பொறியாளரும் இது போன்ற கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தற்போது சேதம் அடைந்துள்ள கட்டுமான பணியினை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரால் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.