தேனி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள தற்காலிக நீரூற்றில் குளிக்கச் சென்ற சிவசாந்தன்(12), வீரராகவன்(12) இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.
தேனி ரயில்வே நிலையம் அருகே உள்ள தற்காலிக நீரூற்றில் நேற்று மாலை தேனியைச் சேர்ந்த சிவராஜா என்பவரது மகன் சிவசாந்தன்(12), ரமேஷ் மகன் வீர ராகவன் (12) ஆகிய இரண்டு சிறுவர்கள் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளனர். இருவரும் ஒரே பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் இருவரும் நேற்று இரவு வரை வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் நேற்றிரவு முதல் சுமார் 30அடி ஆழமுள்ள நீரூற்றில் தீயணைப்பு வீரர்கள் மாயமான சிறுவர்களை தேடி வந்தனர்.
பல மணி நேர தேடுதலுக்கு பின் தற்போது சிறுவர்கள் இருவரும் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட தற்காலிக பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்