தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவக்கம்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில். தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஒரு வாரம் இரவு – பகலாக நடைபெறும் இந்த திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீச்சட்டி, ஆயிரம் கண் பானை மற்றும் மா விளக்கு எடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா இன்று திருக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அத்தி மரத்தில் வெட்டப்பட்ட திருக்கம்பத்திற்கு முல்லைப் பெரியாற்றில் பூஜை வழிபாடு செய்து பின், கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக கௌமாரியம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.
மேள தாளங்கள் முழங்க, பக்தர்களின் குலவை சத்தத்துடன் கோயில் பிரகாரத்தில் திருக்கம்பம் நடப்பட்டது. திருக்கம்பத்திற்கு முல்லைப் பெரியாற்றில் இருந்து தினசரி தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி பக்தர்கள் வழிபடுவார்கள்.
கம்பம் நடப்பட்ட 22 நாட்களுக்கு பிறகு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே ஒன்பதாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கௌமாரியம்மன் பல்வேறு அலங்காரத்திலும் திருத் தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
தொடர்ந்து மே 16ஆம் தேதி அன்று ஊர் பொங்கல் வைக்கப்பட்டு அம்மனை கோயில் வீட்டிற்கு அழைத்து சென்றவுடன் திருவிழா நிறைவு பெறும்.
செய்தியாளர் – சதிஸன்.