தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி சோளிங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும்- எழுத்தும் பயிற்சி சோளிங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
3 நாட்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் என பாட வாரியாக நடைபெற்ற பயிற்சியில் ஒன்றியத்தில் உள்ள 117 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 160 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா ஆகியோர் மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கல்வி அதிகாரிகள் பேசுகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் 2022-2023 ஒரு வருட காலம் முன்னெடுக்கப்பட்டதில் குறிப்பிடத்தக்க சிறப்பான திறனடைவை பெற்றிருக்கிறோம்.
ஆயினும் அடிப்படை மொழித்திறன்களில் திறன் அடைவு பெற்ற குழந்தைகளை வகுப்பு நிலைக்குரிய திறனடைவை நோக்கி அழைத்துச் செல்ல கூடுதல் காலமும், மேம்படுத்தப்பட்ட புதிய அணுகுமுறையும் தேவைப்படுகிறது என்பதால் எண்ணும் எழுத்தும் திட்டம் 2023- 2024 கல்வி ஆண்டிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு வந்துள்ள தொடக்கநிலை ஆசிரியர்கள் பயிற்சியில் பெற்ற கருத்துகளை வகுப்பறையில் உயிரோட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.
இதில் மாவட்ட திட்ட அலுவலர் துரைவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர் பாபு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ( பொறுப்பு) மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.