தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது…
கடந்த 18.08.2023 ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் RK காலனியில் வசிக்கும் பொன்சேகர் என்பவரின் மனைவி பொன்ராணி என்பவர் அவரது TVS Scooty இருசக்கர வாகனத்தில் ஓ. கிருஷ்ணாபுரம் கிராமம் அருகே தனியாக சென்றபோது கருப்பு மற்றும் சிவப்பு கலந்த Pulsar இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பொன்ராணியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 பவுன் எடையுள்ள தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றபோது பொன்ராணி கீழே விழுந்து அவரது வலது பக்க முட்டியில் எலும்பு உடைந்து விட்டது.
இது சம்பந்தமாக பொன்ராணி கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 238/2023 U/S 394 IPC ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழிப்பறி தொடர்பாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் அவர்கள் தலைமையில் அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் ராஜவேலு மற்றும் காவலர்களைக் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று 23.08.2023 ம் தேதி காலை 10.45 மணிக்கு அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் .சகாய அன்பரசு தலைமையில் பெரம்பலூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாக்குளம் பிரிவு பாதை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும் வகையில் நம்பர் பிளேட் பாதி அழிக்கப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த Pulsar இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது,
அவர்கள் பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு ஏரிக்கரையை சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேஷ்(22) மற்றும் பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்(19) இருவரும் முன்னுக்குப் பின் முரணான விபரம் தந்தவர்களை மீண்டும் விசாரிக்க கடந்த 18ம் தேதி அரியலூர் ஓ. கிருஷ்ணாபுரம் அருகே தனியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சுமார் ஏழு பவுன் பறித்ததை ஒப்புக்கொண்டதோடு தொடர்ந்து கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் இரண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு, சேலத்தில் ஒரு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதையும் வாக்குமூலம் அளித்தனர்.
மேற்படி எதிரிகள் வெங்கடேஷ் மற்றும் அஜித் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் பாராட்டினார்கள்.
அரியலூர் செய்தியாளர் D வேல்முருகன்.