நடுநிசியில் நிர்வாண பூஜை: நேரில் பார்த்தவரை கொலை செய்ய முயன்ற கொடூரம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியைச் சேர்ந்தவர் பரசுராமன்( 33). இவர் ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் நிர்வாணமாக தரையில் அமர்ந்து கொண்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். இதை குமரன் (27) என்பவர் அருகில் சென்று பார்த்துள்ளார்.
இதை தொடர்ந்து அவர் பயந்தவாறு சத்தம் போட்டுக்கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடியுள்ளார். இதை தொடர்ந்து பரசுராமன் அங்கிருந்து நிர்வாணமாகவே நடந்து வீட்டிற்கு சென்று விட்டார்.
நிர்வாண பூஜையும் பாதியிலேயே நின்றுபோனது. இதற்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து குமரன் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் அவரது வீட்டிற்குள் புகுந்து குமரன் மற்றும் அவரது தாயார் ஜெயலட்சுமி ஆகியோரை கொலை செய்ய முயற்சித்துள்ளார் பரசுராமன். இந்நிலையில் தாயும், மகனும் பரசுராமனின் பிடியிலிருந்து தப்பியோடி பொதுமக்களை எழுப்பி தங்களைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.
இதையடுத்து பொதுமக்கள் திரண்டதால் பரசுராமன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து குமரன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்வாண பூஜை செய்ததுடன் அதை பார்த்து பதட்டத்துடன் ஓடியவரையும், அவரது தாயையும் சேர்த்து கொலை செய்ய முயற்சி செய்ததற்காக பரசுராமன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.